×

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவன் +2 பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண் எடுத்து சாதனை

நாங்குநேரி: நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 469 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, வணிகவியல்-84, கணக்குப் பதிவியல்-85 கணினி பயன்பாடு-94 என மொத்தம் 600-க்கு 469 மதிப்பெண் எடுத்துள்ளார். நாங்குநேரியில் 12-ம் வகுப்பு படித்து வந்த சின்னத்துரை சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி நீண்ட நாள் சிகிச்சை பெற்றார்.

வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பில் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் சின்னதுரை படித்து வருகிறார். அவருக்கு சாதி ரீதியான துன்புறுத்தல் பள்ளியில் இருந்துள்ளது. சைக்கிளில் காற்றை பிடுங்கிவிடுவது, தின்பண்டம் வாங்கி தர சொல்வது, அவதூறாக பேசுவது என சில மாணவர்கள், சின்னதுரையிடம் தொடர்ந்து பிரச்னை செய்யவே, அந்த மாணவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தனக்கு நேரிடும் துன்பம் பற்றி பள்ளியில் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இவ்விவகாரம் தெரியவந்த நிலையில், தொடர்புடைய மாணவர்களை காவல்துறை அதிகாரி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 மாணவர்கள், இரவு நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினர்.

தடுக்க சென்ற சின்னத்துரையின் தாய் அம்பிகாவதியை காலால் எட்டி உதைத்துள்ளனர். இதை கவனித்த சின்னத்துரையின் தங்கை சந்திரா செல்வி ஓடிச்சென்று தனது அண்ணனை காப்பாற்ற முயன்ற போது சந்திரா செல்வியையும் அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோதும் மனம் தளராமல் படித்து மாணவர் சாதனை படைத்துள்ளார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே காலாண்டு தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில் பொதுத்தேர்வில் 469 மதிப்பெண் எடுத்துள்ளார்.

நாங்குநேரி மாணவர் சின்னதுரையின் உயர்கல்விக்கான செலவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மாணவர் சின்னதுரையின் பள்ளி படிப்புக்கான செலவை பள்ளிக்கல்வித்துறை ஏற்றது.

 

The post நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவன் +2 பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண் எடுத்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Dinakaran ,
× RELATED +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி...